கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: கால அவகாசம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர்.

செங்கல்பட்டு: கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பாக கால அவகாசம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உணவு இடைவெளியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியலை வரும் 30-ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், இந்த 2024-25 நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

'கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது திட்டத்தை செயல்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், திட்ட பயனாளிகள் குறித்தான திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும், பயனாளிகளின் இறுதிப்பட்டியல் வெளியிட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று உணவு இடைவெளி நேரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.