சென்னை: தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியைத் தொடர்ந்து, கேரளாவிலும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தொடங்கப்பட்டுள்ளது.
ஐஜேகே எனப்படும் இந்திய ஜனநாயகக் கட்சி, 2010-ம் ஆண்டு பாரிவேந்தரால் தொடங்கப்பட்டது. மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில், அதிக ஈடுபாடு காட்டியதால் இந்தக் கட்சி படிப்படியாக வளர்ந்தது. கட்சி நிறுவனர் பாரிவேந்தர், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
தொடர்ந்து கல்வி, மருத்துவம் என பல சேவைகளை மக்களுக்கு ஆற்றி வரும் இந்திய ஜனநாயகக் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், கேரளாவில் இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கேரளாவில் நேற்று நடைபெற்றது.
இது குறித்து கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ஆனந்த முருகன் கூறுகையில்,"கேரளாவிலுள்ள 14 ஜில்லாவிலும் இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் பள்ளி, கல்லூரி கட்டண உதவி, மருத்துவ வசதிபெற முடியாதவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை ஐஜேகே செய்யும்.
கேரளாவில் கட்சிப் பணிகளுக்காக, தற்போது மாநில அளவில் 7 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 16-ம் தேதி கேரளாவில் முதல் மாநில மாநாடு நடைபெறும். இதில் கட்சியின் தேசிய தலைவர் ரவி பச்சமுத்து பங்கேற்க உள்ளார்" என்றார்.