ஆவடி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்யும் பணி 2-வது நாளாக நீடிப்பு


பிரதிநிதித்துவப் படம்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்யும் பணி 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகள் மற்றும் தெரு சாலைகளில் மாடுகள் கேட்பாரின்றி சுற்றித் திரிகின்றன. இதனால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி, மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைவது வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆகவே, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, மாநகராட்சி சுகாதார பிரிவினரை மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, ஆவடி மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள் முகைதீன், குமார் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருமுல்லைவாயல் சிடிஎச் சாலை பகுதிகளில் சுற்றித் திரிந்த 8 மாடுகளை பறிமுதல் செய்தனர். பிறகு, அந்த மாடுகள், ஆவடி, அருந்ததிபுரத்தில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

"ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு, பட்டியில் அடைக்கப்படும். அம்மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பட்டியில் அடைக்கப்படும் மாடுகளை உரிமை கோரி உரிமையாளர்கள் வராத பட்சத்தில், அவைகள் ஏலம் விடப்படும்" என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.