அமைச்சகம் உத்தரவிட்டும் கடலூர் வரை நீட்டிக்கப்படாத மைசூர் எக்ஸ்பிரஸ்: சார் ஆட்சியரிடம் மனு


கடலூர்: ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை கடலூர் வரை நீட்டிப்பு செய்யப்படவில்லை என ரயில் பயணிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ரயில் பயணிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல கட்டங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திய விளைவாக கடந்த 07.03.24 அன்று மைசூர் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் அதை செயல்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வேயில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் இன்று (ஜூன் 27) காலை சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை நிறைவேற்ற ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டு, ரயில் பயணிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

இதில் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் முகமது ரியாஸ், ஆ.வீரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, நகர செயலாளர் எஸ்.ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் எம் முத்துக்குமரன், மாவட்ட குழு உறுப்பினர் சித்ரா, என்.கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.