கள்ளச் சாராய விவகாரத்தில் அரசு அதிகாரிகள்தான் முக்கிய குற்றவாளிகள்: குஷ்பு குற்றச்சாட்டு


கள்ளக் குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு. படம்: எஸ்.எஸ்.குமார்

கள்ளக்குறிச்சி / சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 63-ஆக உயர்ந்த நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 225 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, அங்கு நேற்று முன்தினம் வரை 59 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதன் (62), ஏசுதாஸ் (35), சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ரஞ்சித்குமார் (37), சரசு (52) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிர்இழந்தோர் எண்ணிக்கை 63-ஆகஉயர்ந்தது.

பல இடங்களில் தவறு: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று கருணாபுரத்தில் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு குஷ்பு உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

கள்ளச் சாராயத்தால் 63 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? பல இடங்களில் தவறு நடந்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம். இந்தவழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். உண்மையில், இங்குள்ள அதிகாரிகள்தான் குற்றவாளிகள்.

இப்பகுதியில் கள்ளச்சாராயம் எளிதாகக் கிடைக்கிறது. காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? கள்ளச் சாராய நடமாட்டம் குறித்து புகார் தந்தும்கூட, காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வேலை வாங்கித் தந்து, சொந்தக் காலில் நிற்கச் செய்ய வேண்டும். அதேபோல, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

போலீஸாரிடம் சரமாரி கேள்வி: இதற்கிடையில், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்ற குஷ்பு, அங்கிருந்த போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி கேட்டார். போலீஸாரிடம் குஷ்பு பேசும்போது, “கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் கூலி தொழிலாளர்கள். அவர்களது குடும்பத்தினர் ஆதரவின்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கு கள்ளச் சாராயம் எளிதாக கிடைத்தது எப்படி? கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, திரும்பவும் அதே தவறைச் செய்கிறார்கள்” என்றார்.

77 பேர் மீட்பு: இதற்கிடையில், கள்ளச் சாராயம் குடித்து எந்த அறிகுறியும் தெரியாததால் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த 77 பேரை, அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர்கள் மீட்டு,மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “பொதுவாக மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு 12 முதல் 24 நேரத்துக்குப் பின்னர்தான் அறிகுறிகள் தெரியவரும்.

அப்போது பாதிப்பு தன்மை தீவிரமாக இருக்கும். அறிகுறிதெரியாமல் வீட்டில் இருந்தவர்களை செவிலியர்கள் வாயிலாகக் கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

x