ஓசூரில் அரசு அலுவலக வளாகத்தில் வளர்ந்த கஞ்சா செடி அழிப்பு


ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தையொட்டி வளர்ந்திருந்த ஒரு அடி உயர கஞ்சா செடி.

ஓசூர்: ஓசூரில் அரசு அலுவலக வளாகத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர்.

ஓசூர் உழவர் சந்தை செல்லும் சாலையில் ஒரே வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மகளிர் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையம், வருவாய்த்துறை, புள்ளியியல் துறை என பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. இதனால், இந்த வளாகத்தில் பல்வேறு பணிகளுக்காகத் தினசரி நகர மற்றும் கிராமப் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த வளாகத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் இல்லை.

இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் எரிவதில்லை. மேலும் இரவு காவலர்களும் இல்லை. இதைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் கஞ்சா மற்றும் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் இடது பக்கம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு அடி உயரத்துக்குக் கஞ்சா செடி வளர்ந்திருந்தது. இதை பார்த்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அரசு அலுவலர்கள் சிலர் கூறும்போது, “அரசு அலுவலக வளாகத்தில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, “கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது, தவறி இந்த வளாகத்தில் விதை விழுந்திருக்கும். அல்லது யாராவது கஞ்சாவைப் பயன்படுத்தியபோது, விதை விழுந்து செடி முளைத்திருக்கும். தற்போது, கண்டறியப்பட்ட செடியை அழித்து விட்டோம். இப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்துப் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.