ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை: வனத்துக்கே திரும்பும் முடிவில் பழங்குடியின மக்கள் @ பென்னாகரம்


பென்னாகரம் அடுத்த போடூர் சருக்கல் பாறை பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி.

தருமபுரி: பென்னாகரத்தை அடுத்த போடூர் சருக்கல் பாறை இருளர் குடியிருப்பு பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் போடூர் பகுதியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அடர்வனத்தில் ஜீடாமரத்துக் கொல்லை அருகே சருக்கல் பாறை என்ற பகுதி உள்ளது. இங்கு, 50 குடும்பங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்தனர். அப்பகுதியில் வேளாண் தொழில் செய்தும், வன பொருட்களை சேகரித்தும் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், வன விலங்குகள் ஆபத்தில் இருந்து அவர்களை காக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.

அதன் பயனாக கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதி மக்கள் வனத்தில் இருந்து வெளியேறி பென்னாகரம் அடுத்த போடூர் அருகே சோதனைச் சாவடி பகுதியில் அரசு அமைத்துக் கொடுத்த குடியிருப்புகளில் குடியேறினர். அப்பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சருக்கல் பாறை இருளர் காலனி என்று பெயரிடப்பட்டது.

இப்பகுதிக்கு, சின்னாறு பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கென ஏற்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 1 மாதமாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியது: சின்னாற்றில் கிணறு அமைத்து அங்கிருந்து மின்மோட்டார்கள் மூலம் பென்னாகரம் வரை குடிநீர் அனுப்பும் திட்டம் மூலம் சருக்கல் பாறை குடியிருப்புப் பகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், சின்னாற்றில் உள்ள கிணறுக்கு செல்லும் மின் பாதையில் அண்மையில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், எங்கள் பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை.

எனவே, சுற்று வட்டார விளைநிலங்களில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். அங்கிருந்தும் போதிய அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. பென்னாகரத்தில் இருந்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வரும் வழித்தடத்தில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்னதாக உள்ள குடியிருப்புகள் வரை ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த இணைப்பை எங்கள் பகுதி வரை நீட்டிப்பு செய்து குடிநீர் வழங்கும்படியும் கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஒரு மாத காலமாக குடிநீருக்கும், வீட்டு தேவைக்கான தண்ணீருக்கும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். இதே நிலை நீடித்தால் அரசு வழங்கிய குடியிருப்புகளை விட்டு வெளியேறி மீண்டும் ஜீடாமரத்துக்கொல்லை அருகே வனத்தில் உள்ள சருக்கல் பாறை பகுதிக்கே குடியேறி விடலாம் என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.