வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: அதிகாரியிடம் கடம்பூர் ராஜு வலியுறுத்தல்


சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்க உள்ள வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நின்று செல்லும் வகையில் ஆவன செய்ய வேண்டும் என்று சட்டபேரவை அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் வலியுறுத்தினார்.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தென் மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வணிக நகரமாக பார்க்கப்படும் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

ஏற்கெனவே, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி நகரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது இயக்கப்பட உள்ள சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்யுமாறு கடம்பூர் ராஜு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி, சென்னையில் உள்ள தலைமையகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார்.