இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது: ராமேசுவரம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் 


ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்.

ராமேசுவரம்: இந்திய கடல் எலையைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என ராமேசுவரம் மீனவர்களுக்கு மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இரண்டு மாதக் காலம் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து ஜுன் 15-ம் தேதியிலிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளை கைப்பற்றி 36 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், தமிழக விசைப்படகு ஒன்றிணை சுற்றி வளைக்கும் போது அப்போது எதிர்பாராத விதமாக இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகிலிருந்த கடற்படை வீரர் ரத்நாயக்க என்பவர் கடலில் தவறி விழுந்து யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னர் இன்று சுமார் 550 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பாக இன்று அதிகாலையிலிருந்து மீன்வளத்துறையினர் அதிகாரிகள், சர்வதேக கடல் எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், என ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர்.

மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அனைவரும் ஆதார் நகல், மீனவர் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும், அனுமதி டோக்கன் பெற்றுச் செல்ல வேண்டும், எனவும் மீன்வளத்துறையினர் வலியுறுத்தினர்.