தஞ்சாவூரில் ஏஐடியூசி சார்பில் பண்ணைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 


தஞ்சாவூர்: தஞ்சாவூர் கால்நடை இயக்குநர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் தி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ.அரசப்பன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் வெ.சேவையா, போக்குவரத்துச் சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி சங்க மாநிலப் பொருளாளர் தி. கோவிந்தராஜன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று, ''ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் மாடு முட்டி உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரின் 2 குழந்தைகள் கல்விச்செலவை அரசே ஏற்று, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,

சுய உதவிக் குழு மூலம் வேலை கொடுப்பதை கைவிட்டு, பண்ணை நிர்வாகமே நேரடியாக வேலை வழங்க வேண்டும், பணியின் போது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்கி அமல்படுத்த வேண்டும்'' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்திக் கண்டன முழக்கமிட்டனர். முடிவில், ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

x