தீர்மான நோட்டுடன் வெளியேறிய விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்: காரை மறித்து கவுன்சிலர்கள் போராட்டம்


விருதுநகர்: விருதுநகரில் இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் தீர்மான நோட்டுடன் ஊராட்சிக் குழுத் தலைவர் வெளியேறினார். இதையடுத்து, அவரது காரை கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. துணைத் தலைவி சுபாஷினி, ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் 10 பேரும், அதிமுக கவுன்சிலர் 7 பேரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அலுவலக பயன்பாட்டுக்கான பொருள்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு, வாகனங்களுக்கான செலவினத் தொகை, அலுவலக ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அனைத்து தீர்மானங்களையும் திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

கூட்டத்தில், கவுன்சிலர் பாலச்சந்திரன் பேசுகையில், ''மத்திய அரசிடமிருந்து 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4.63 கோடி வந்துள்ளது. மாநில நிதிக்குழு மூலம் ரூ.2.40 கோடி வந்துள்ளது. ஆனால், அந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணி விவரங்கள் பற்றி தீர்மானத்தில் கொண்டுவராமல் உள்ளதே?'' என்று கேள்வி எழுப்பினார்.

கவுன்சிலர் பாரதிதாசன் பேசுகையில், ''வந்துள்ள நிதியின் மூலம் பணிகளை எவ்வாறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூடியே கலந்து பேசி இக்கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். நாங்கள் கொடுக்கும் பணி விவரங்களைப் பெற்று அதை செயல்படுத்த தலைவர் முன்வர வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

கவுன்சிலர் மச்சராஜா பேசுகையில், ''இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். ஆனால், ''பெறப்பட்டுள்ள நிதி ஆதாரம் குறித்து அடுத்த கூட்டத்தில்தான் தீர்மானம் கொண்டுவர முடியும்'' என்று மாவட்ட ஊராட்சித் தலைவி வசந்தி பதில் அளித்தார். இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, இத்துடன் கூட்டத்தை முடிப்பதாகக் கூறிவிட்டு, தலைவர் வசந்தி கூட்டத்திலிருந்து வெளியேறினார். பின்னர், துணைத் தலைவி சுபாஷினி தலைமையில் தொடர்ந்து கூட்டத்தை நடத்த கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். தலைவி இருக்கையில் அமர்ந்து, துணைத் தலைவர் கூட்டத்தை தொடர்ந்து நடத்தத் தொடங்கியபோது, கூட்ட அவைக்குள் வந்த மாவட்ட ஊராட்சித் தலைவி வசந்தி, தீர்மான நோட்டை எடுத்துக்கொண்டு அவையிலிருந்து புறப்பட்டார். மேலும், தீர்மான நோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டு தனது காரில் புறப்பட்டார்.

அப்போது, கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறி, மாவட்ட ஊராட்சித் தலைவியின் காரை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக நுழைவாயில் கேட் அடைக்கப்பட்டது. தகவலறிந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி பவித்ரா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஊராட்சித் தலைவி வெளியே செல்லாதபடி கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், தீர்மான நோட்டை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், அதை ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, காரிலிருந்து இறங்கி தனது அறைக்குள் சென்ற மாவட்ட ஊராட்சித் தலைவி வசதி, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீர்மான நோட்டை தனது அலுவலக அறையிலேயே வைத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை சந்தித்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசினார். அவரது அறிவுரைப்படி, மறு தேதி அறிவிக்கப்படாமல் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கவுன்சிலர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

x