“உங்களுக்கு தெரியாமல் எப்படி?” - கள்ளக்குறிச்சியில் போலீஸாரிடம் குஷ்பு சராமரி கேள்வி


கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராயம் கூலித் தொழிலாளர்களுக்கு எளிதாக கிடைக்கிறது என்றால், போலீஸுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும்? என்று போலீஸாரிடம் சராமரியாக குஷ்பு கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் அதிகளவு கலந்த மெத்தனால் விஷச் சாராயமாக மாறிவிட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறி பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

கள்ளச் சாராயத்தால் இறந்த 62 பேரில் 5 பேர் பெண்கள். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பான விவகாரத்தை ஊடகங்களின் வாயிலாக வந்த செய்திகளை வைத்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்குச் சென்றது. அங்கிருந்த போலீஸாரிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர்.

போலீஸாரிடம் குஷ்பு பேசுகையில், “சார், அந்தப் பொண்ணுக்கு 20 வயசுதான், குழந்தை இருக்கிறது, ஆனால் அவருடைய கணவர் இறந்துவிட்டார். இன்னொரு பெண் 2 மாத கர்ப்பிணி, ஏற்கெனவே 6 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அவருடைய கணவரும் இறந்துவிட்டார். இந்த கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் கூலி தொழிலாளர்கள். இவர்கள் கூலி வேலை செய்து தினமும் குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர். தற்போது அவர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தினர் நிற்கதியாய் நிற்கிறார்கள்.

கூலித் தொழில் செய்யும் 130 பேருக்கு கள்ளச் சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், போலீஸுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும்? என்ன சார் உங்களுக்கு தெரியவே தெரியாதுனு சொல்றீங்க, இதில் என்ன லாஜிக் இருக்கிறது,” என தொடர்ந்து கேள்வி கேட்டார்.

அதற்கு போலீஸார் , “கள்ளச் சாராய வழக்கில் அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்,” என்றனர். அதற்கு குஷ்பு, “கைது செய்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்து ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். ஒருவர் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள். அவர்கள் திருந்தும் அளவுக்கு தண்டனையே கிடைப்பதில்லை,” என குற்றம்சாட்டினார்