மோடிக்கு ஜே போடும் தமிழக பிரபலங்கள்!


திருவள்ளுவரின் உடை அரசியல், முருகனை வைத்து வேல் அரசியல், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை நிறுவும் அரசியல் என பல உத்திகளை தமிழகத்தில் புகுத்தி சலங்கைக் கட்டி ஆடிய பாஜக, இப்போது தங்களுக்கு ஆதரவாகப் பிரபலங்களை பேச வைக்கும் அரசியலை கையில் எடுத்திருக்கிறது. அதற்கு இளையராஜாவும், பாக்யராஜும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எப்படியும் கட்சியை வளர்த்தெடுக்கவும் பிரபலங்களை குறி வைத்தும் முஸ்தீபுகளில் குதித்திருக்கும் பாஜகவின் இந்த முயற்சி திருவினையாகுமா?

சினிமா பிரபலங்களும் அரசியலும்

மற்ற வட இந்திய மாநிலங்களைப் போல அல்லாமல் சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கும் பழக்கமுள்ளவர்கள் தமிழக ரசிகப் பெருமக்கள். ரசிகர்களின் நாடித் துடிப்பை சரியாகப் பிடித்து வைத்திருக்கும் திராவிட கட்சிகள் சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் கட்சிக்குள் இழுத்துப் போடுவதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். திமுகவில் தலைசிறந்த பேச்சாளர்களும் களப்பணியாளர்களும் இருந்தபோதும் எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர், என்எஸ்கே என பிரபலமான நடிகர்கள் கட்சியை வளர்க்கத் தேவைப்பட்டார்கள்.

சினிமா மூலம் கிடைத்த புகழால்தான் எம்ஜிஆர் தைரியமாக திமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்க முடிந்தது. ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. அரசியலில் ஜெயலலிதா அரசியலில் ஜெயிப்பதற்கும் எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் முகமாக மாறியதற்கும் சினிமா ஒரு காரணமாக இருந்தது. விஜயகாந்த் கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை பெற சினிமா புகழுக்கும் பங்குண்டு. இன்று கமல் வரை அரசியலில் இறங்கியிருப்பதற்கு சினிமா புகழ்தான் ஓர் அஸ்திவாரம். தமிழக அரசியலுக்கு இப்படியொரு வரலாறு இருப்பதால்தான் இங்கே நடிகர்கள் பலரும் இன்னும் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கும் ஆவலை வெளிப்படுத்துகிறார்கள்.

பாஜகவில் குவிந்த பிரபலங்கள்

இதிலிருந்து விலகியே இருந்த தேசிய கட்சியான பாஜக, தற்போது கட்சியை வளர்க்க திராவிட கட்சிகளின் பாணியை கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. திமுக, அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்களையும் மதிக்கப்படாதவர்களையும் இனம் கண்டு கட்சியில் சேர்ப்பதை உத்தியாக மாற்றிய பாஜக, சினிமாவில் ரிட்டையர் ஆனவர்கள், வாய்ப்பில்லாதவர்கள், பிற கட்சிகளில் மன வருத்தத்தோடு இருப்பவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்தது. ராதாரவி, குஷ்பு போன்றவர்கள் எல்லாம் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களைத் தாண்டி கெளதமி, குட்டி பத்மினி (இப்போது விலகிவிட்டார்), மாளவிகா, காயத்ரி ரகுராம், கங்கை அமரன், நமீதா, கஸ்தூரி ராஜா, ஜி.ராம்குமார், தீனா, பேரரசு, பெப்சி சிவா, பாபு கணேஷ் எனப் பலரும் பாஜகவில் வரிசையாகச் சேர்க்கப்பட்டார்கள்.

2019 தேர்தலுக்கு முன்பாகவும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகும்தான் இந்த வேகம் துரிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் சினிமாக்காரர்கள் அதிகமாக உள்ள கட்சியாக பாஜகவே உள்ளது. கட்சியை வளர்ப்பதில் திராவிட கட்சிகளைப் போல சினிமா நட்சத்திரங்களுக்கும் இடமளித்து அவர்களை பாஜகவில் இணைப்பதை ஒரு அஜெண்டாவாக மாற்றியிருப்பதாக பாஜகவில் சொல்கிறார்கள். 2021-ல் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க ரஜினியை பாஜகவில் இணைப்பது அல்லது அவருடைய தனிக்கட்சிக்கு பக்கபலமாக செயல்படுவது என்று திட்டம் வகுத்தும், கழுவுகிற மீனில் நழுவிக் கொண்டார் ரஜினி.

வட இந்திய உத்தி

பாஜக தலைமையைப் பொறுத்தவரை 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டது. இரண்டு முறை தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால், மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பது இந்தியாவில் அரிதாகிவிட்டது. எதிர்ப்பலைகள் இயல்பாகவே தோன்றும். இந்தச் சூழலில் பிரபலங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவோ அல்லது பாஜகவை நோக்கி நகரும்போது, அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், மக்களை எளிதாகச் சென்றடைய மாஸ் மீடியாவான சினிமா ஒரு எளிதான ஒரு வழி என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறது பாஜக.

பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதல் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக இருந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியானது. வெகுஜன மீடியாவான சினிமா நட்சத்திரத்தை வைத்து பிரதமர் மோடி அளித்த அந்த பேட்டியை பாஜகவின் அரசியல் உத்திக்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

இப்போதும் பாஜக பேசும் விஷயங்களைச் சொன்ன ‘தி காஷ்மீர் ஃபைல்’ படத்தை பாஜகவினர் முன்னிறுத்தியதும் அதைக் கொண்டாடியதும் அடுத்த உதாரணம். இதேபோல பாஜகவுக்கு ஆதரவாக வட இந்திய பிரபலங்கள் ஒரே ஹாஷ்டேக் (#) வார்த்தையைப் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிடுவது போன்றவை எல்லாம் பிரபலங்கள், சினிமாக்காரர்கள் வழியாக பாஜகவை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஓர் உத்திதான்.

பாஜக உத்திக்கு வெற்றி

வட இந்தியாவில் வெற்றிபெற பாஜக கையாண்ட உத்திகளைத்தான் தற்போது தென்னிந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக களமிறக்கி வருகிறது. கேரளா, தமிழகத்திலும் அந்த உத்தியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான், சினிமா பிரபலங்களை பாஜகவுக்கு சாதகமாகப் பேச வைக்கும் உத்தி என்கிறார்கள் பாஜகவில். அதில், தற்போது பாஜக வெற்றி பெறவும் தொடங்கியிருக்கிறது என்றும் சொல்லலாம். அந்தவகையில், இதுவரை அரசியல் சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருந்த இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதி தமிழகத்தில் பேசு பொருளாகியிருக்கிறார்.

அம்பேத்கர் பற்றிய புத்தகத்தில் முன்னுரை எழுதிய இளையராஜா, பிரதமர் மோடியை சட்டமேதை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதை வைத்து அவர்தான் தமிழகத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக சூடான விவாதப் பொருளாக இருந்தார். அந்தச் சூடு மறைவதற்குள் மோடியின் சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், “மோடியை விமர்சிப்பவர்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியது.

திரையுலகைச் சார்ந்த ஜாம்பவான்களான இளையராஜா, பாக்யராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமரை புகழ்ந்து எழுதியும் பேசியும் இருப்பதன் மூலம், 2024 தேர்தல் நெருங்க நெருங்க இவர்களைப் போல பிரபலங்கள் பேசும் போக்கு இன்னும் வேகம் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசன் நம்மிடம் பேசினார். “இளையராஜா விஷயத்தில், அந்தப் புத்தகம் பேரே ‘அம்பேத்கரும் மோடியும்’ என்பதுதான். அதில் முன்னுரை எழுதும்போது இருவரையும் ஒப்பிட்டுத்தான் எழுத வேண்டியிருக்கும். அது இளையராஜாவுக்கு தெரியாமலா இருக்கப்போகிறது. இதுவரை அரசியலே பேசாத இளையராஜாவை, மோடியை புகழ்ந்து எழுத வைத்திருப்பதில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதுபோல மோடியின் சாதனை புத்தக வெளியீட்டு விழா என்பது தெரிந்துதானே பாக்யராஜ் பங்கேற்றிருப்பார். ஆக, பிரபலங்களை பாஜகவுக்கு சாதகமாக பேச வைக்கும் ஒரு உத்திதான் இது.

பிரபலங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ அக்கட்சியின் தலைவரை புகழ்ந்தோ பேசும்போது, அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருப்பதும், மீண்டும் மோடியே ஆட்சிக்கு வருவார் என்று தொடர்ந்து பேசப்படுவதும் பிரபலங்கள் பாஜக நோக்கி நகர்வதற்கு ஒரு காரணம்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் முரளி, சிம்ரன், சரத்குமார், ராதிகா எனப் பல பிரபலங்கள் திரண்டார்கள். அப்போது பாக்யராஜ் திமுக பக்கம் நகர்ந்தார். கடந்த காலத்தில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பயன்படுத்திய உத்திதான். அதை பாஜக தற்போது கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இளையராஜா. பாக்யராஜ் போல இன்னும் பலரும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசுவதை அடுத்தடுத்துப் பார்க்கலாம்” என்கிறார் குமரேசன்.

யார் வந்தாலும் அரவணைப்போம்

இதற்கிடையே இளையராஜா விவகாரத்தில், அவருடைய தம்பி கங்கை அமரன் மூலம் பாஜக கொடுத்த அழுத்தமே, அவர் அப்படி எழுதியதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை பாஜக எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வைத்ததையும் பார்க்க முடிந்தது.

இதுதொடர்பாகவும் பாஜகவை நோக்கி திரைத் துறையினர் வருவது பற்றியும் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “இது ஒரு வக்கிரம் பிடித்த சமூகமாக மாறிவிட்டது. ஒரு பிரதமரைப் புகழ்ந்து பேசுவது தவறு என்று யாராவது சொல்ல முடியுமா? அவரவர் கருத்துகளை அவரவர் சொல்கிறார்கள். புகழ்பவர்களை விமர்சிப்பது, சாதியைச் சொல்லி திட்டுவது எல்லாம் வெறுப்பு அரசியலை உமிழக்கூடியவர்கள் செய்வது.

பிரதமர் மோடியை புகழ்ந்து எழுத இளையராஜாவுக்கு பாஜக தரப்பில் அழுத்தம் எதுவும் கொடுக்கப்படவில்லை. மாறாக, இளையராஜாவை விமர்சனம் செய்யத்தான் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் அரசியல். திமுக எப்படி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது என்பதை இப்போது எல்லா துறையைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமரின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களை நேரிடையாக சென்றடைந்திருக்கிறது. கரோனாவால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் பொருளாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்க பிரதமர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை எல்லா துறையினரும் பார்க்கிறார்கள். இதில் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கு அல்ல. யார் பாஜகவுக்கு வந்தாலும் அவர்களையும் அவர்களுடைய ஒத்துழைப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார் நாராயணன் திருப்பதி.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்பி-க்களை பெறவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதற்கு பிரபலங்களை தங்களை நோக்கி இழுப்பதும் கைகொடுக்கும் என அக்கட்சி நம்புகிறது. நம்பிக்கைதானே அரசியல்!

x