10 பேர் கலந்துக்கிட்ட கட்சிக் கூட்டத்துல, 11 பேரோட வேட்டி கிழிஞ்சுதுன்னா கண்ண மூடிக்கிட்டுச் சொல்லலாம், அது காங்கிரஸ் கூட்டம்னு! அத்தனை கோஷ்டி, அம்புட்டுச் சண்டை. ஐயா நேரு காலத்துலருந்தே இது தொடருதுனு நினைக்கிறேன்.
அதுலேயும் தமிழ்நாடு காங்கிரஸ பத்திக் கேட்கவே வேணாம். தொண்டர் எண்ணிக்கையைவிட தலைவருங்க எண்ணிக்கை கொஞ்சம் தூக்கலாவே இருக்கும் அந்தக் கட்சியில, கோஷ்டி சண்டைக்குப் பஞ்சமே இல்ல. வழி வழியா வரும் இந்தப் பழக்கத்தைத் தாய் தடுத்தாலும் விடேன், அன்னை (சோனியா) தடுத்தாலும்விடேன்னு விடாமப் பிடிச்சு வெச்சிருக்காங்க. இதனாலதான்யா கட்சி காணாமப் போயிட்டு இருக்குன்னு இவங்களுக்கு இனி எப்படிச் சொல்லி புரியவைக்கிறதுன்னும் தெரியல.
2018 செப்டம்பர்ல புதுசா பொறுப்பேற்ற தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத், கட்சி தலைமையகமான சத்யமூர்த்தி பவனுக்கு வந்தாரு. அவரை வரவேற்றது வேட்டுச் சத்தமில்ல; வேட்டி கிழியுற சத்தம்தான். “என்னய்யா அந்த ஆள ஆலோசனை கூட்டதுக்குள்ள விடுறீங்க, என்னய விடமாட்டேங்கிறீங்க”ன்னு புகார் சொல்லி, ஆளாளுக்கு மல்லுக்கட்டுனாங்க. "அங்க என்ன சத்தம்...?"னு கேட்ட பத்திரிகைக்காரங்ககிட்ட அப்ப மாநில தலைவரா இருந்த திருநாவுக்கரசர் சொன்னாரு, “அழைப்பில்லாம வந்தவங்கள வெளியேத்துனோம், வேற ஒண்ணும் பிரச்சினை இல்ல”ன்னு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னோட பாணியில சிரிச்சுக்கிட்டே சொன்னாரு, "கைகலப்பெல்லாம் கெடையாது. ரொம்ப நாளைக்கு அப்புறம் கட்சிக்காரங்க சந்திச்சிக்கிட்டதால ஒருத்தருக்கொருத்தர் கை குலுக்கிக்கிட்டாங்க”ன்னு.
2019 மக்களவைத் தேர்தல்லேயும் தோத்து, 2024 தேர்தலுக்கான முன்னோட்டமான உத்தர பிரதேச தேர்தல்லேயும் தோத்துட்டதால காங்கிரஸ்காரங்க கொஞ்சம் பக்குவப்பட்டிருப்பாங்கன்னு எதிர்பார்த்தது நம்மோட தப்பு. அவங்களால கோஷ்டி மோதலை கைவிடவே முடியல. சமீபத்துல ஸ்டாலின் சுயசரிதை வெளியீட்டு விழாவுக்கு வந்த ராகுல்காந்திய சத்தியமூர்த்தி பவனுக்கு அழைச்சாங்க காங்கிரஸ்காரங்க. அவரு வேணாமேன்னு சொல்லியும் விடல. "நீங்க வந்தா மட்டும் போதும்... வந்தா மட்டும் போதும்”னு 'சிவாஜி' படத்து ரஜினி மாதிரி கூப்பிட்டாங்க. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சவங்கள அவருக்கு அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்ல காங்கிரஸ் எவ்வளவு பலமா இருக்குதுன்னு காட்டுறதுதான் கே.எஸ்.அழகிரியோட பிளான். ஆனா, அவரு ஒரு பிளான்போட்டா அவரை குப்புறத் தள்ளிவிட்டு கும்மி அடிக்கிறதுக்குன்னே சிலபேரு இன்னொரு பிளானைப் போட்டாங்க.
மேடையில முன்னாள் தலைவர்கள் எல்லாம் முன்வரிசையில உட்கார்ந்திருந்தாங்க. முன்னாள் தலைவர்ங்கிற முறையில ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஜோரா மேடையேறினாரு. "யாருங்க நீங்க... கொஞ்சம் பின் வரிசையில உட்காரலாமே?"ன்னு ஒரு குசும்பன் சொல்ல, "என்னையவா யாருன்னு கேட்ட... மறந்து போச்சா... ஜெயலலிதாவையே மிரட்டுனவன் நானு"ன்னு அவரு சிவாஜி கணேசன் பாணியில ஏற இறங்கப் பேசியும் இறக்கப்படல யாரும்.
மனுஷன் கோவிச்சுக்கிட்டு கீழேயிறங்கிட்டாரு. "யாருடா அண்ணனை கீழே இறக்கிவிட்டது?"ன்னு வடிவேலு மாதிரி சிலர் குரல் கொடுக்க, நல்லவேளை 'கை குலுக்கல்கள்' நடைபெறுவதற்குள் ராகுல்காந்தி வந்துவிட்டார். "ஒரு ரூம்ல காங்கிரஸ்காரங்க 50 பேர் இருந்தா 500 பேர் இருக்கிறதுக்குச் சமம்"னு ராகுல் பேசியது, இவிய்ங்களோட திட்டுச்சத்தம்தான் காரணம்னு சொல்றாங்க.
இதெல்லாம் தலைநகர்ல, சத்தியமூர்த்தி பவன்ல, முக்கிய தலைவர்கள் முன்னாடி நடந்த சண்டைங்க. சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கடலூர், திண்டுக்கல், மன்னார்குடி, தஞ்சாவூர் டைரிகளைப் புரட்டிப் பார்த்தோம்னா, எப்பல்லாம் காங்கிரஸ்காரங்க ஆர்ப்பாட்டம், போராட்டம், ஆலோசனை கூட்டம்னு ஒண்ணு கூடுறாங்களோ அப்பெல்லாம் சட்டை கிழியுறது சாரி... சண்டை நடக்கிறது வழக்கமா இருக்கிறது புரியும். வெறும் 10, 20 பேர் கூடுற இந்த ஊர்கள்லேயே இத்தனை கோஷ்டி மோதல்னா, கன்னியாகுமரியைப் பத்தி கேட்கவும் வேணுமா? அங்க திமுக, அதிமுகவுக்கு இணையா இந்தக் கட்சியிலேயும் ஆட்கள் இருக்கிறதால, இங்க ரொம்ப உக்கிரமா சண்டை போட்டுக்குவாங்க.
கரடியே காறித்துப்பிய கதை
வசீகரன்னு ஒரு தேசிய கட்சியோட தலைவர் தமிழ்நாட்ல இருக்காரு தெரியுமா? அதாங்க... ஆம் ஆத்மி கட்சியோட மாநில ஒருங்கிணைப்பாளர். அவர் என்ன சொன்னாருன்னா, "பாஜகவுக்கு எதிர்க்கட்சின்னா நாங்கதான்"னு. "அப்ப காங்கிரஸ்?"னு கேட்டா, "அப்படியொரு கட்சி இருக்குதா?"ன்னு பொசுக்குன்னு கேட்டுப்புட்டாப்ல.
என்னதான் இருந்தாலும் அவரு அவ்வளவு மோசமா பேசியிருக்க கூடாது. இன்னைக்கு பஞ்சாப்புல ஆஆக ஆட்சியில உட்கார்ந்திருக்கிறதுக்கு யாரு காரணம்... கேஜ்ரிவாலா? இல்லவே இல்ல. அந்த மாநில காங்கிரஸ் தலைவருங்க டர்பன்பிடி சண்டை போட்டதும், ஒருத்தர் காலை மாத்தி ஒருத்தர் வாருனதும்தான் காரணம். அந்த நன்றி விசுவாசம்கூட இல்லாம பேசப்புடாதுல்ல.
தலை இல்லாத கோழி...
உலகத்துலயே ஒரு கட்சி உருப்படியா ஒரு தலைவர் இல்லாம செயல்படுதுன்னா அது காங்கிரஸ் கட்சிதான். கிட்டத்தட்ட இது ஒரு கின்னஸ் சாதனை. ஏற்கெனவே தலைவர் இல்லாம இருக்குது கட்சி. இதுல, “தலைமைப் பொறுப்பில் இருந்து நேரு குடும்பத்தினர் விலகியிருக்கணும்”னு ஜி- 23 தலைவருங்க வேற விவரம் புரியாம குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருக்கிறாங்க. அவங்களோட திட்டம் என்னன்னு அவங்களுக்கும் தெரியல; கட்சியாலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த அமளிக்கு நடுவுல, நம்ம சசி தரூரோ, பாராளுமன்றத்தைக் காலேஜா நினைச்சுக்கிட்டு, லேடி எம்பி-க்களோட செல்ஃபி எடுக்கிறதே வேலையாத் திரியுறாப்ல.
காங்கிரஸ் கட்சியில அமைப்பு ரீதியா சீர்திருத்தம் செய்யணும் செய்யணும்னு பல பேர் யோசனை சொல்றாங்க, ஆனா, கேட்க நாதியில்லியே? இந்த லட்சணத்துல, யோசனை சொல்ல வந்த பிரசாந்த் கிஷோரையே கட்சியில சேர்க்கத் துடிக்கிறாங்க. அந்த மனுஷனை கட்சில சேர்த்தா ஒரு ஓட்டு வேணா கூடுதலா கிடைக்கும். அந்த மனுஷன் சொல்ற யோசனையை கேட்டாத்தான் கட்சி உருப்படும். அது ஒண்ணும் புது யோசனை கிடையாது எல்லாரும் சொன்ன யோசனைதான். கொஞ்சம் டேட்டா கலந்து சொல்றாரு கிஷோருன்னு சொல்லிட்டாப்ல சிவகங்கை ஜூனியர் கார்த்தி சிதம்பரம். இந்த லட்சணத்துல, புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட கதையா, கட்சி உறுப்பினர் சேர்க்கைய பாஜக பாணியில இணைய வழியில செஞ்சுட்டு இருக்காங்க. ஒருவேளை, நேரில் ஆட்களைத் திரட்டி உறுப்பினர் சேர்க்கை நடத்தினா அங்கேயும் நாலு பேருக்கு வேட்டி கிழிஞ்சாலும் கிழிஞ்சுரும்னு நினைச்சிருப்பாங்களோ என்னவோ!
யோவ்... பொறுப்பான எதிர்க்கட்சியா செயல்படுங்கய்யா. மக்கள் தானா உங்களுக்கு ஓட்டுப்போடுவாங்கன்னு காங்கிரஸ்காரங்ககிட்ட சொன்னா, “நம்ம உழைப்புக்கும், ஓட்டுக்கும் சம்பந்தமேயில்ல. பாஜக ஆட்சி வேணாம்னு எப்ப மக்களுக்குத் தோணுதோ அடுத்த நிமிஷமே காங்கிரசைத் தேடிப் பிடிச்சி ஆட்சிக்கட்டில்ல உட்கார வெச்சிடுவாங்க”ன்னு அப்ராணியாச் சொல்றாங்க. அய்யோ பாவம்!
யப்பா... காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும் பஞ்சமில்ல, அறிவுஜீவிகளுக்கும் பஞ்சமில்ல, யோசனை சொல்ற ஆளுகளுக்கும் பஞ்சமில்ல. களத்துல இறங்கி வேலை செய்யத்தான் ஆள் தேவை. அப்படி யாராச்சும் இருக்கீங்களா? ‘அய்யோ யாராச்சும் உழவு வுடுங்களேன், யாராச்சும் விதைங்களேன், யாராச்சும் தண்ணீர் பாய்ச்சுங்களேன்’ என்று குரல் கொடுத்துட்டு அறுவடைக்கு மட்டும் அத்தனை பேரும் கருக்கருவாளோட களத்துக்குப் போறத எப்ப இந்த காங்கிரஸ்காரங்க நிறுத்துறாங்களோ அன்னைக்குத்தான் கட்சி உருப்படும்.
அதுவரைக்கும் உங்களுக்கும் சேர்த்து மோடிதான்யா பிரதமரு... அனுபவிங்க!