திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை 2-ம் நாளாக முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள். படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்றும் 2-ம் நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம், திருமுருகன்பூண்டி மற்றும் வெள்ளகோவில் ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளிலும் திருப்பூர் மாநகராட்சியிலும் தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஊதியம் வழங்கக் கோரி கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. அதில் சுமுக தீர்வு எட்டப்படாததால் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கக் கோரி இன்று இரண்டாவது நாளாக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கூறும்போது, "மாநகராட்சி தூய்மைப் பணியாளருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் ரூ. 753 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் 507 தான் வழங்கப்படுகிறது. நகராட்சி தூய்மை பணியாளருக்கு ரூ. 715 வழங்க வேண்டும். ஆனால் ரூ. 507 தான் வழங்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ரூ.200 வரை ஒரு ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் குறைக்கப்படுவதால் அவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாழும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தும் உரிய முடிவு எட்டப்படாததால், பணிகளை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தை இரண்டாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால் திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தற்போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

x