கும்பகோணம்: கும்பகோணத்தில் 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற 35 வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயர்களை இந்தி, சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றிதையும் அவற்றுக்கான தண்டனைகளை கடுமையாக்கியதையும் கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்தப் போராட்டத்துக்கு கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ச.விவேகானந்தன் தலைமை வகித்தார்.
100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின் போது சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் மறிப்பதற்காக, கண்டன முழக்கமிட்டபடி சென்றனர். ஆனால் கும்பகோணம் மேற்கு போலீஸார், அவர்களை ரயில் ரயில் நிலைய வாசலில் மறித்து அவர்களில் 35 வழக்கறிஞர்களை மட்டும் கைது செய்தனர்.