சிதம்பரத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பாருக்கு போலீசார் சீல் 


கடலூர்: சிதம்பரம் நகரில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பாருக்கு போலீசார் சீல் வைத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் பார் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ராஜாராம் உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று (ஜூன் 26) காலை சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி மேற்பார்வை சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் த. பரணிதரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சிதம்பரம் பேருந்து நிலைய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீஸாரின் கண்காணிப்பின்போது, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மார்க் மதுபான கடை அருகே தமிழ்ச்செல்வன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உரிய அனுமதி இல்லாமல் மதுபானம் அருந்துவோர் பயன்படுத்தக்கூடிய வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப் தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வருவாய் துறை மூலம் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

இது போன்று மதுபான கடைக்கு அருகே உரிய அனுமதி இல்லாமல் மதுபானம் அருந்துவதற்கு உதவி புரியும் வகையில் கடை நடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.எஸ்.பி. ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.