சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை, அவர் அரசியல் பேச முற்பட்டுவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டப் பேரவையில் உடனடி விவாதம் நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
இன்று காலையிலும் சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவையின் மாண்புகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.
அதன்பேரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை. அவர் அரசியல் பேச முற்பட்டுவிட்டார். அவர் அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு இப்படிப்பட்ட கருத்துகளை சொல்வது வேதனை அளிக்கிறது. சட்டப் பேரவைத் தலைவர் அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டால் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
பேரவைத் தலைவர் சட்டமன்றத்தை தான் நடத்த வேண்டும். அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுவது முறையல்ல. அரசியல் பேச வேண்டும் என்றால் சட்டப் பேரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் வந்து அரசியல் பேச வேண்டும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.