`மு.க.ஸ்டாலினின் மனச்சாட்சி சபரீசன்'- போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கட்சியையும், ஆட்சியையும் பின்னிருந்து இயக்குவதாக கூறப்பட்டுவரும் நிலையில், அவரை ஸ்டாலினின் மனச்சாட்சி என்று போஸ்டர் ஒட்டிய மதுரை நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு அவரது மருமகன் முரசொலி மாறன் வலதுகரமாகத் திகழ்வதுபோல, மு.க.ஸ்டாலினுக்கு அவரது மருமகன் சபரீசன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது. கட்சி, ஆட்சியின் பவர் சென்டர் என்று அவரை விமர்சிக்கிறார்கள் எதிர்கட்சிகள். அண்ணா காலத்தில் என்.வி.நடராஜன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்ததால், திமுகவை முதலியார் கட்சி என்று சிலர் விமர்சித்தனர். இப்போது கட்சியில் சபரீசன் கை ஓங்கியிருப்பதால், மீண்டும் திமுக முதலியார் கட்சியாகிவிட்டது என்றும் சிலர் விமர்சித்துவந்தார்கள்.

இந்தச் சூழலில் மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி சி.வீரகணேசன், "முதல்வர் ஸ்டாலின் அருகே சபரீசன் நிற்கிற புகைப்படத்தைப் போட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனச்சாட்சி திரு.சபரீசன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தார். அந்த போஸ்டரில் மதுரையைச் சேர்ந்த எந்த மாவட்ட செயலாளர், அமைச்சரின் புகைப்படத்தையும் போடாத அவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோரது படங்களை மட்டும் அச்சிட்டிருந்தார். இது சாதி ரீதியான குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், "அந்த போஸ்டரை ஒட்டிய வீர கணேசனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை திமுகவினரிடம் கேட்டபோது, இந்த போஸ்டருக்காக எல்லாம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. காரணம், ஏற்கெனவே இவர், கலைஞரின் மூளை முரசொலி மாறன்... மு.க.ஸ்டாலினின் மனச்சாட்சி சபரீசன் என்று போஸ்டர் ஒட்டியவர்தான். ஆனால், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக சபரீசன் நியமிக்கப்பட்டிருப்பதாக இவரது பெயரில் இவரது ஆதரவாளர்கள் யாரோ போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். அப்படி எந்த நியமனமும் நடக்காத நிலையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது பல்வேறு ஊகங்களுக்கும், சர்ச்சைக்கும் வித்திட்டது. அதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார். உண்மையில் அவர் சாதி ரீதியான ஆள் கிடையாது. சுப.வீரபாண்டியனின் திராவிட இயக்க தமிழர் பேரவையில் இருப்பவர் அவர்" என்கிறார்கள்.

x