இலங்கை கடற்படையால் நாகை மீனவர் 10 பேர் சிறைபிடிப்பு: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள்.

நாகப்பட்டினம் / சென்னை: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், முத்துசெட்டி(70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35) மற்றும் வைத்தியநாதன் (45), வானவன்மாதேவி கலைமுருகன் (25), கீச்சாங்குப்பம் கோவிந்தசாமி (60), கடலூர் மணி பாலன் (55), ஆந்திராவைச் சேர்ந்த கங்கால கொருமையா மற்றும் 2 மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த 21-ம்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கேசுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 10 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மீனவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 22-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம்: இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 203மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழக மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசமுள்ள 47 மீனவர்கள், 166 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் வலியுறுத்திஉள்ளார்.

இலங்கை வீரர் உயிரிழப்பு: அக்கரைப்பேட்டை மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை சுற்றிவளைத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, இலங்கை கடற்படைகப்பலில் இருந்த வீரர் ரத்நாயக்க, கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட கடற்படையினர், காங்கேசன்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேர் மீதும், காங்கேசன் துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திர நாட்டார் கூறும்போது, “இலங்கை கடற்படையினர் எச்சரிக்கும்போதே, இந்திய மீனவர்கள் கைகளைத் தூக்கி சரணடைந்து விடுவார்கள். இயற்கை சீற்றம் காரணமாக இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்திருக்கலாம். தமிழக மீனவர்கள் மீது பழி போடுவது நியாயம் இல்லை. எனவே, கொலைவழக்கை இலங்கை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

தலைவர்கள் கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புமணி: இலங்கை கடற்படையினரால் ஒரே வாரத்தில் 36மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் உதவிகளைப் பெறும் இலங்கை அரசு, இந்தியாவை சற்றும் மதிக்கவில்லை. தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைகிறது. எனவே, இலங்கை படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன்: இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கதையாகி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து, இது தொடர்பான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.