கள்ளச் சாராய உயிரிழப்பு 59-ஆக அதிகரிப்பு: 21 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை


கள்ளக்குறிச்சி / திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்த 223 பேர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம்,புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் நேற்று வரை 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். 155 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்த 59 பேரில், 58 பேரின் உடல்கள்அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உட்பட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 4 பேர் கைது: இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சாராய வியாபாரி கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உட்பட 17 பேர் நேற்று முன்தினம் வரை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் மாதேஷ் உள்ளிட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலத்தைச் சேர்ந்த சடையன், சென்னையைச் சேர்ந்த பன்சிலால், கவுதம், ஏழுமலை ஆகியமேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 21 பேர்கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக ஆர்ப்பாட்டம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புக்காக, திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிகமான பெண்கள் விதவைகளாக இருப்பதற்கு, டாஸ்மாக் கடைகள்தான் காரணம். தமிழகத்தில் சாராயம், கஞ்சா என அனைத்துமே புழக்கத்தில் உள்ளன. கல்வராயன்மலையில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதுதான் திமுக அரசின் சாதனை. இதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

கள்ளச் சாராயம் அருந்தி உயிர்இழந்தவர்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இறந்தவர்கள் நாட்டுக்காக உயிரிழந்தார்களா அல்லதுவிவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக ஏதேனும் செய்தார்களா? இந்த சம்பவம் தொடர்பாகமத்தியக் குழுவினர் ஆய்வுசெய்து, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். விரைவில் திமுக அரசு அகற்றப்படும். கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக தேமுதிக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். இவ்வாறு பிேரமலதா பேசினார்.

இந்து முன்னணி வலியுறுத்தல்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திண்டுக்கல் நகரில் உள்ள அபிராமியம்மன் சிலையை, திண்டுக்கல் மலைக்கோட்டை மீது வைக்க வலியுறுத்திவரும் ஜூலை 5-ம் தேதி முதல்கையெழுத்து இயக்கம் நடத்தமுடிவு செய்துள்ளோம். முன்னாள்நீதிபதி சந்துருவின் அறிக்கை ஏற்க முடியாதது. அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனையில் அரசியல் பின்புலம் உள்ளதால், இந்த வழக்கை சிபிஐவிசாரிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு என்பதால், அறநிலையத் துறையில் நடைபெறும் தவறுகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

x