'இன்னும் காமராஜர்... காமராஜர்னு சொல்லிக்கிட்டு...'- முணுமுணுத்த கார்த்தி சிதம்பரம்


வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையின்போது, தஞ்சையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுத்ததுடன், இன்னும் காமராஜர் காமராஜர்னு சொல்லிக்கிட்டு என்று கார்த்தி சிதம்பரம் முணுமுணுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காந்தியின் தண்டி உப்பு சத்தியாகிரகம் நடந்த அதே நேரத்தில், தமிழகத்தில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. ராஜாஜி தலைமையில் நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காமராஜர் உள்பட 100 காங்கிரஸார் கலந்துகொண்டனர். 1930 ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கிய இந்த சத்தியாகிரக யாத்திரை, 16 நாட்கள் நடந்து வேதாரண்யத்தில் நிறைவடைந்தது. அதனை நினைவுகூறும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை நடந்துவருகிறது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில், கார்த்தி சிதம்பரம் எம்பி உள்ளிட்ட காங்கிரஸார் இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று தஞ்சை வந்தனர். தலையில் குல்லா, கையில் கொடியுடன் நடந்துவந்த அவர்கள், அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது உள்ளூர் காங்கிரஸாரையும் அழைத்துக்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன்படி தஞ்சையில் அந்த யாத்திரையில் பங்கேற்க சிவாஜி மன்றத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே திரண்டு நின்று, தங்கபாலு உள்ளிட்டவர்களை வரவேற்றனர். அப்போது காமராஜர் சிலைக்கு (சிவாஜி கணேசன் திறந்தது) மாலை அணிவிக்குமாறு சிவாஜி மன்றத்தினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், கார்த்தி சிதம்பரம் மறுத்ததால், தங்கபாலுவும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிவாஜி மன்ற தலைவரும், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளருமான சதா வெங்கட்ராமன் 'காமதேனு' இணையத்திடம் கூறுகையில், "முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பாலோயரும், காங்கிரஸ் நிர்வாகியுமான மன்னை மதியழகன் நேற்றே இந்த யாத்திரை குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்து அழைப்பு விடுத்தார். ஓரிடத்தில் நின்று வரவேற்பு கொடுத்து, கொஞ்ச தூரம் நீங்களும் நடந்துவந்தால் நன்றாக இருக்கும் என்றார். அதன்படி நாங்கள் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திரண்டு நின்றோம். யாத்திரை சிலை அருகே வந்ததும் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்ததுடன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் (சிதம்பரம் ஆதரவாளர்), எங்கள் பயணத்திட்டத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று கூறிவிட்டார். தங்கபாலு கூட, மாலை இருக்கிறதா? என்று கொஞ்சம் ஆர்வமாக விசாரித்தார். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அங்கு வந்த கார்த்தி சிதம்பரம், குறுக்கிட்டு இன்னும் காமராஜர் காமராஜர்னு சொல்லிட்டு... நேரம் இல்லைங்க... வாங்க போகலாம் என்று சொல்லிவிட்டார். உடனே, தங்கபாலுவுடன் அவருடன் சேர்ந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டார். வேதாரண்யம் யாத்திரையில் பங்கேற்றவர்களில் ஒருவர் காமராஜர். அவரது சிலைக்கே மாலை அணிவிக்க மறுத்ததும், கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் காமராஜரை புறக்கணித்து பேசியதும் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மாநில தலைமையிடம் முறையிட உள்ளோம்" என்றார்.

இதுபற்றி கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "உண்மையிலேயே நேரம் இல்லாமல்தான் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றோம். சதா வெங்கட்ராமன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர். அதனால் அவர் இதைச் சர்ச்சையாக்குகிறார்" என்றார்கள்.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஒன்றும் புதிதல்ல. 2 கோஷ்டியும் தனித்தனியாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தால்கூட பரவாயில்லை. ஒரு கோஷ்டி சொல்லி, சிலைக்கு மாலை அணிவிப்பதா என்று இன்னொரு கோஷ்டி கோபித்துக்கொண்டு சென்றது, அந்தத் தலைவரை அவமரியாதை செய்வதாகாதா? என்று புலம்புகிறார்கள் தஞ்சை காங்கிரஸார்.

x