திருப்பூர்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் நிர்ணயித்து, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (ஜூன் 25) தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கோரிக்கைகள் விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, துணைத் தலைவர்கள் கே.உன்னி கிருஷ்ணன், பாலன், பூண்டி நகராட்சி மன்ற உறுப்பினர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: "அரசாணைப்படி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.562, குடிநீர் பணியாளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.638 வழங்க வேண்டும். நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.638, குடிநீர் பணியாளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.715 வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.753, குடிநீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.792 கணக்கிட்டு வழங்க வேண்டும்.
ஆனால் மேற்கண்ட ஊதியம் வழங்காமல் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடியும், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவின் படியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசாணைப் படி, ஊதியம் நிர்ணயித்து நிலுவை தொகையும் வழங்கிட வேண்டும்.
ஈபிஎஃப், இஎஸ்ஐ பிடித்தங்களை முறையாக நிறுவனங்களின் பங்கு தொகையுடன் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை இன்னும் நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் இன்று (ஜூன் 25) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து தொழிலாளர் நலத்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வு எட்டப்படாததால், நாளை (ஜூன் 26) வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.