திருவண்ணாமலை: எமர்ஜென்சி சட்டத்தை கொண்டு வந்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை குப்பை தொட்டியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி வீசியது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத், மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் ஆகியோர் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஜுன் 25-ம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறும்போது, "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1975-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சியை. எமர்ஜென்சி என்று சொல்வதை விட, இந்திய அரசியலமைப்பு சட்டம் முடக்கப்பட்ட நாள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு குப்பை தொட்டியில் வீசிய நாள். அம்பேத்கர் வகுத்த இந்திய அரசிலமைப்பு சட்டப்படிதான், பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மாற்ற போகிறது என மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பொய் பரப்புரையில் எதிர்கட்சிகள் ஈடுபட்டன. இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் 160 முறை திருத்தம் செய்யப்பட்டதில், காங்கிரஸ் கட்சியே 150-க்கும் மேற்பட்ட முறை திருத்தம் செய்துள்ளன. நீட் தேர்வில் முறைகேடு செய்வதர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில், 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் என சட்டத் திருத்தத்தை பாஜக அரசு செய்துள்ளன. பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார் என தவறான தகவலை கூறினர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொண்டு வந்த மண்டல் கமிஷனை பாஜக ஆதரித்தது.
நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை, இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. 2 ஆண்டு எமர்ஜென்சியில் சட்ட விரோத ஆட்சியை நடத்தியவர் இந்திரா காந்தி. தலைவர்களை சிறையில் அடைத்தது. காமராஜரை வீட்டு சிறையில் வைத்தவர். பாஜக தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மூன்று முறையும் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.
ஜனநாயகம், மக்களாட்சி, அரசிலமைப்பு சட்டத்தை பேணி காக்கக்கூடிய கட்சியாக பாஜக உள்ளன. சுதந்திர இந்தியாவுக்கு முன்பு ஜாலியன் வாலாபாக் படுகொலைபோல், சுதந்திர இந்தியாவுக்கு பிறகு எமர்ஜென்சி காலத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை பார்க்க முடிகிறது.
மிசா கொடுமையில் தானும் பாதிக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூறி வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் தந்தையை போன்று அவரும், கூட்டணி அமைத்துள்ளார். இந்திரா காந்தி மன நிலையில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளன. அவசர நிலை சட்டம் கொண்டு வரப்பட்ட நாளை, கருப்பு நாளாக பாஜக கடைபிடிக்கிறது." என்றனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாவட்டத் தலைவர்கள் பால சுப்ரமணியன்(தெற்கு), ஏழுமலை(வடக்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செய்தி தொடர்பாளர் ஏ என் எஸ் பிரசாத் அவர்கள் மற்றும் மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன்.