``காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் பேசி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் மூட்டை முடிச்சுகளை அகற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நெல்லை கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அக்கட்சியிலேயே சிலர் அதிருப்தியில் இருக்கிறார். ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், திருச்சி வேலுச்சாமி உள்பட பலர் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுபெற்றவருமான நெல்லை கண்ணன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறித்து முகநூலில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். தமிழ்நாட்டில் ஒருகாலமும் இயலாது. திருச்சியில் தண்டியாத்திரை விழாவில் காமராசரின் அணுக்கத் தொண்டர் திருச்சி வேலுச்சாமி அவர்களின் பெயரை அச்சிடக் கூடாது என்று கே.எஸ்.அழகிரி ஆணியிட்டிருக்கின்றார். இவர்கள் யாருக்கும் தண்டி யாத்திரை பற்றி எள் முனையளவும் தெரியாது. அழகிரி, ப.சிதம்பரத்தால் சிதம்பரம் தொகுதியில் எம்பியாக்கப்பட்டவர். அதே சிதம்பரத்தாலேயே தலைவர் ஆக்கப்பட்டவர். 1962-ல் காமராசரிடம் அறிமுகமாகி அவர் வாழ்த்தோடு மேடைகளில் பேசிக் கொண்டிருந்த என்னைப் பற்றி ஒரு நேர்காணலில் விடை தருகின்றார் அழகிரி, பட்டி மண்டபம் பேசுவாரே அவரா? என்கிறார். மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டில்லித் தலைமையிடம் பேசி இந்த மூட்டை முடிச்சுகளை அகற்றவேண்டும்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகளும், தலைமையை விமர்சிப்பதும் இயல்புதான். ஆனால், கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று அகில இந்திய தலைமையிடம் வலியுறுத்தலாம். மூத்த நிர்வாகியான நெல்லை கண்ணனோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இதை முறையிடுவது, காங்கிரஸ் கட்சி திமுகவின் கிளை அமைப்புகளில் ஒன்றா என்று கேலி செய்யும் நிலையை ஏற்படுத்திவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் காங்கிரஸார்.