மதுரை ஆவின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்


மதுரையில் இன்று ஆவின் நிறுவனம் முன்பு  மதுரை ஆவின் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை ஆவின் நிறுவன முறைகேடுகளை கண்டித்தும், காலிப் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பவும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆவின் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் ஆவின் வளாகம் முன்பு இன்று நடைபெற்றது.

இதற்கு கிளைத் தலைவர் த.பழனிக்குமார் தலைமை வகித்தார். தமிழக கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எம்.துரைச்சாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஆவின் சிஐடியூ கிளைச் செயலாளர் மோசஸ் காந்தி, மாநகர சிஐடியூ மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மாநகர மாவட்ட சிஐடியு செயலாளர் ரா.லெனின் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு சீருடை, தையல் கூலியை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கான கேன்டீனை நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும். ஆவினில் முறைகேடாக பணி நியமனத்தில் ஈடுபட்ட நியமனக் குழு அதிகாரிகள் மீது நீதிமன்றம் அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆவின் வளாகத்திற்குள் குவிந்துள்ள கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும். ஆவினுக்குச் சொந்தமான வாகனங்களைப் பராமரிக்கும் ஒர்க் ஷாப் செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

x