மக்களைத் தேடி மருத்துவம்: மா.சுப்பிரமணியன் சொன்ன புள்ளிவிவரம்!


நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்திருக்கிறார். இன்று உதகை அருகே தோடா பழங்குடியினர் வாழும் முத்தநாடுமந்து பகுதியில் நடமாடும் மருத்துவமனை சேவையை அவர் தொடங்கிவைத்தார்.

மேலும், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதைக் கண்டு, தானும் யோகாசனம் செய்துகாட்டினார்.

பின்னர் அங்கு நடந்த விழாவில் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகத்தை வழங்கி பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்துவருகிறேன். தமிழகத்தில் உள்ள 387 ஒன்றியங்களுக்கு நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு இணையாக இந்த நடமாடும் மருத்துவமனை இருக்கும். இதில், தற்காலிகக் கூடாரம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும். மாவட்டத்தில் உள்ள 40 தொலைதூர கிராமங்களுக்கு மாதத்துக்கு 40 முறை இந்த நடமாடும் மருத்துவமனை சென்று மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் 1,590 தோடர்கள் மட்டுமே உள்ளனர். இதில், 1,096 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களுக்கு முழுமையாகப் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 61 பேர், நீரிழிவு நோய் உள்ளவர்கள் 21 பேர், இரண்டு பாதிப்புகளும் உள்ளவர்கள் 15 பேர் மற்றும் பிசியோதெரபி பெறுவோர் 52 பேர். இவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்வதால் உடல் நலத்துடன் இருக்கின்றனர். காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. கட்டபெட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்திட்டம் மூலம் முதல் நாளே 20 பேர் பயன்பெற்றுள்ளனர். இதே போல சுகப் பிரசவம் பெற கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது” என்றார்.

மேலும், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கடந்த 7 மாதங்களில் தமிழகத்தில் 61 லட்சத்து 34 ஆயிரத்து 350 பேர் பயன் பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 85 சதவீதம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 7 லட்சத்து 29 ஆயிரத்து 272 பேரில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 686 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், உயர் ரத்த அழுத்தத்தால் 23,943 பேரும், நீரிழிவு நோயால் 8,133 பேரும், 6,103 பேர் இரண்டிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,164 பேர் நோய் ஆதரவு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 42,970 பேர் இத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில், முதல் தவணை கரோனா தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது’ என்றார் மா.சுப்பிரமணியன்.

வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசும்போது, “அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஒட்டப்பயிற்சி சென்றபோது, கோத்தகிரி அருகேயுள்ள கட்டபெட்டு குடிமனை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திடீரென ஆய்வு செய்தார். அங்கு தண்ணீர் மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரியதை அடுத்து ஆவன செய்தாக உறுதியளித்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் பிற திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், சுகாதாரப் பணிகள் இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் தோடர் இன மக்கள் கலந்துகொண்டனர்.

x