கோவை: சங்கனூர் பள்ளம் தூர்வாரி சீரமைப்புப் பணியில் மாநகராட்சி தீவிரம்


சங்கனூர் பள்ளம் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் மா.சிவருகு பிரபாகரன். அருகில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மற்றும் அதிகாரிகள் குழுவினர் உள்ளனர்.

கோவை: ரூ.49 கோடி மதிப்பில் 2.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சங்கனூர் பள்ளம் தூர்வாரி சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உள்ள முக்கிய நீர் வழித்தடமான சங்கனூர் பள்ளம் எனப்படும் சங்கனூர் ஓடை தடாகம் பகுதியில் தொடங்கி கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், நவ இந்தியா, அவிநாசி சாலை, திருச்சி ஆகியவற்றின் வழியாக சென்று நொய்யலாற்றில் கலக்கிறது. இந்த ஓடை மொத்தம் 16.6 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். மாநகரில் இந்த ஓடை 11.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது. சங்கனூர் ஓடை முன்பு மக்களின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஓடையாக இருந்தது.

பின்னர், முறையாக பராமரிப்பு இல்லாதது, ஆக்கிரமிப்பு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவற்றால் சங்கனூர் ஓடை முற்றிலும் பாழடைந்தது. பல்வேறு இடங்களில் சங்கனூர் ஓடையின் கரைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனால் பருவமழைக் காலங்களில் இந்த வழித்தடத்தில் மழைநீர் செல்ல முடியாமல் அவை சாலைகளில் வழித்தோடியது.

எனவே, சங்கனூர் பள்ளத்தை தூர்வாரி சீரமைத்து, பழமை வாய்ந்த ஓடையை மீட்டெடுக்க மாநகராட்சிக்கு சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து சங்கனூர் பள்ளத்தை தூர்வாரி சீரமைக்கம் பணியை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்டமாக ரூ.49 கோடி மதிப்பில், சங்கனூர் பள்ளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. சங்கனூர் பள்ளம் சீரமைப்புப் பணி தற்போது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூன் 25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,”முதல் கட்டப் பிரிவில் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து காந்திபுரம் 7-வது வீதி விரிவாக்கம் வரை 2.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் தற்போது 1.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

மீதமுள்ள தூரத்துக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பள்ளத்தை தூர்வாரி, அடைப்புகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பை தடுக்க சுவரும் கட்டப்படுகிறது. இப்பணிகளை பார்வையிட்ட ஆணையர் சீரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்." என அதிகாரிகள் கூறினர்.