கரூரில் நடைபெறாத அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தலைமறைவு காரணமா?


கரூர்: நில மோசடி புகாரில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசைக் கண்டித்து கரூரில் மட்டும் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

அனுமதி கேட்கப்படவில்லை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையிடம் அதிமுக சார்பில் எவ்வித அனுமதியும் கேட்கப்படாததுடன், ஆர்ப்பாட்டத்துக்கான எந்த ஏற்பாடும் செய்யப் படவில்லை.

நிலமோசடி புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று(ஜூன் 25) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பதாலும், அவரும் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதாலும் கரூரில் ஆர்ப்பாட்டம் நடை பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து கரூரில் உள்ள அதிமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘ஆர்ப்பாட்டம் குறித்து இதுவரை தகவல் இல்லை. இருந்தால் தெரிவிக்கிறோம்’’ என தெரிவித்தனர்.

x