சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தீர்மானம் - முதல்வர் ஸ்டாலின் | பாமக வெளிநடப்பு


முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி பேரவையின் இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவாதத்தில் தொடர்ந்து பேச பேரவைத் தலைவர் அனுமதிக்காததால் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

பாமக உறுப்பினர் ஜி.கே.மணி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 16 மாவட்டங்கள் கடைசியில் உள்ளன. இந்த மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களது மேம்பாட்டுக்காக மிகவும் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு, 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மக்கள் அதிருப்தியில் உள்ளதால், இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சரியான தரவுகளுடன் இல்லாததால் ரத்து செய்து விட்டது. எனவே, இதுகுறித்து, அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற தரவுகளை அரசு திரட்டி தந்துள்ளது. ஆனால், சமூகம், பொருளாதார மேம்பாடு போன்ற தரவுகள் திரட்ட மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பிஹாரில் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்த பேரவை கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம்.

ஜி.கே.மணி (பாமக): சாதிவாரி கணக்கெடுப்பும், உள் இடஒதுக்கீடும் தனித்தனியான பிரச்சினைகள். மாநில அரசே உள் இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது. தமிழகத்திலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அது போல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்: திமுக வன்னியர் சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி ஆட்சியில்தான் 20 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அவரை அந்த சமூகத்துக்கு எதிரானவர் போல் சித்தரிப்பதையே பாமக தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேச பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதிக்காததால் பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசும்போது, “உள் இடஒதுக்கீடு பிரச்சினையை அமைச்சர்கள் அரசியல், கூட்டணி, தேர்தல் என திசை திருப்பப் பார்க்கின்றனர். பிஹார், ஒடிசா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களைப் போல தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என்றார்.