உதகையில் தொடங்கியது குதிரை பந்தயம்: கோப்பையை வென்றது டார்க் சன்


உதகை குதிரை பந்தயத்தில் தமிழ் புத்தாண்டு கோப்பையை டார்க் சன் தட்டி சென்றது.

நீலகிரி மாவட்டத்தின் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயங்கள் உதகையில் தொடங்கின. ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்கும். 135-வது குதிரை பந்தயம் இன்று தொடங்கியது. இதற்காக பெங்களூரு, சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 600 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முக்கிய பந்தயங்களான ‘நீலகிரி டர்பி’ மே 15-ம் தேதியும், டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மே 14-ம் தேதியும், ‘நீலகிரி தங்க கோப்பை’ போட்டி ஜூன் 2-ம் தேதியும், ‘ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ ஜூன் 3-ம் தேதியும் நடக்கின்றன. முதல் நாளான இன்று 7 போட்டிகள் நடத்தப்பட்டன. முக்கிய போட்டியான புத்தாண்டு கோப்பைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றன. போட்டியில் ‘டார்க் சன்’ என்ற குதிரை வெற்றி பெற்றது. குதிரையை ஜாக்கி நஹத் சிங் சவாரி செய்தார். வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர் ஜெ.சபாஸ்டியன், உரிமையாளருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டன. குதிரை பந்தயங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர்.

x