கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணையின் மூலமே நீதி நிலைநாட்டப்படும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமை வகித்தார். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் போதை பொருட்கள், கள்ளச்சாராய விற்பனையால் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று, உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தப் பகுதியின் முக்
கியப்புள்ளி துணையோடு கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் பெரும்புள்ளிகள் என்பதால், காவல்துறையால், ஒரு நபர் ஆணையத்தால் விசாரணைநடத்தி நீதி கிடைக்காது. எனவேதான் சிபிஐ விசாரணை நடத்தக் கோருகிறோம். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்.
கடந்தாண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தனர். அப்போது ‘கள்ளச் சாராய வியாபாரிகள் இரும்புக்கரம் கொண்டுஅடக்கப்படுவார்கள்’ என்று முதல்வர்கூறியிருந்தார். தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
கள்ளச் சாராய விற்பனை குறித்து பேச, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், சட்டப்பேரவையில், 2023 மார்ச் 29-ம் தேதி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார். அந்த மனுவில் நானும் கையெழுத்திட்டிருந்தேன். அப்போதே அந்த தீர்மானத்துக்கு அனுமதி வழங்கி விவாதிக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடந்திருக்காது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராய ஒழிப்பு சோதனை நடத்தி 876 சாராய வியாபாரிகள் மீது 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார்கள்.
ஒரே இடத்தில் 26 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. சாக்லெட், திரவம், ஊசி வடிவத்தில் போதைப்பொருட்கள் புழங்குகின்றன. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்; உயிர்கள் பறிபோகின்றன. இதற்கெல்லாம் பொறுப் பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
அதிமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் பொன்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.கள்ளச் சாராய உயிரிழப்புகளைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்.
ஆளுநரிடம் மனு அளிக்க முடிவு: கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பழனிசாமி, “தமிழகத்தில் கஞ்சா, போதை விற்பனை குறித்து தமிழக ஆளுநரிடம் ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். தற்போது கள்ளச் சாராயம் அருந்தி 58 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.