`எங்களுக்கு முன் இருக்கை வேண்டும்'- அடம்பிடித்த அதிமுக கவுன்சிலர்கள்


மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களின் போராட்டம்

சென்னை, திருவனந்தபுரம் போன்ற ஊர்களில் இருப்பதுபோல, மதுரை மாநகருக்குள் ஒரு மிருகக் காட்சி சாலை அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் இந்திராணி வசந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சித் தேர்தலில் புதிய கவுன்சிலர்களைத் தேர்வு செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மேயர் இந்திராணி தீர்மானம் வாசித்தார்.

அப்போது கருப்பு ஆடை அணிந்தபடி கூட்டத்துக்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள், "எதிர்கட்சியான எங்களுக்கு ஏன் முன் வரிசையில் சீட் ஒதுக்காமல் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கியிருக்கிறீர்கள்" என்று மேயர் இருக்கையை முற்றுகையிட்டனர். "அதிமுகவை எதிர்கட்சியாக அங்கீகரித்து முதல் வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டார்கள்.

அதிமுக கவுன்சிலர்களுக்கான இடம் குறித்து மாநகராட்சி விதிப்படி பரிசீலிக்கப்படும் என்று ஆணையர் உறுதியளித்த பின்னரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். பிறகு கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த அரசு சொத்து வரியை உயர்த்தி மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அவர்கள் அவையை விட்டு வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டின் குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பேசினார்கள். அந்தந்த மண்டலக் கூட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றித் தந்தால் உரிய நிதி ஒதுக்கி அந்தக்குறைகள் தீர்க்கப்படும் என்றார் ஆணையாளர்.

அப்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் போஸ், "தமிழ்நாட்டின் 2-வது பெரிய நகரான மதுரையில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், கோவை மாநகராட்சி பூங்காவில்கூட பாம்பு உள்ளிட்ட விலங்குகள் இருக்கின்றன. வைகை அணையில் ஏற்கெனவே இருந்த மிருகக் காட்சி சாலையும் மூடப்பட்டுவிட்டது. எனவே சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களில் இருப்பது போல இயற்கையான மிருகக்காட்சி சாலையை மதுரையில் அமைக்க வேண்டும் இதற்காக 71, 72 வார்டுகளில் 151 ஏக்கர் நிலம் உள்ளது. அதேபோல மாடக்குளம் கண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதற்குப் பதிலளித்த மேயர் இந்திராணி, "மதுரை நகர் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வண்டியூர், செல்லூர் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின்போது தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் சித்திரைப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பாதி விழாக்கள் முடிந்துவிட்டன. ஆனால், எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. சித்திரைத் திருவிழா முடிந்த பிறகு பொருட்காட்சி நடத்தினால், பயனுள்ளதாக இருக்காது. எனவே, அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும்" என்றார். அதேபோல, "சொத்து வரி உயர்வில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பதால், அந்த அறிவிப்பையும் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

x