74 திருநங்கைகளுக்கு நலதிட்ட உதவிகள் - கோவை ஆட்சியர் வழங்கினார்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு நலதிட்ட உதவிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

கோவை: கோவையில் 74 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 607 மனுக்கள் பெறப்பட்டன. குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 52 திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டைகளும், 22 திருநங்கைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக பவானி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் வண்டல் மண் எடுக்க வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என பவானி ஆற்று நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.