தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் தெருநாய்கள்: பொதுமக்கள், ஊழியர்கள் அச்சம்


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சங்கரன்கோவில், புளியங்குடி, கடைய நல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாத காலத்துக்குள் 50-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடிக்கு ஆளாகினர். சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும் மனுக்கள் அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சன்புதூரில் 8 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறின.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கிராமங்கள் முதல் நகர்ப் பகுதிகளில் வரை அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஏராளமான தெருநாய்கள் சுற்தித் திரிவதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,"தெரு நாய்கள் தொல்லை குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தெரு நாய்கள் சுற்றித் திரிவதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

மனு அளிக்க வரும் மக்களிடம் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். ஆனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, ஓய்வெடுக்கின்றன. இதையே கண்டுகொள்ளாத அதிகிரிகள் மற்ற பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப் படுத்த எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது" என கூறுகின்றனர்.