“முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வலியுறுத்தல்


திருப்பத்தூர்: கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (திங்கள்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: "அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதற்கு எடுத்தாலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு என பலவற்றை காரணம் காட்சி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களை நிறைவேற்றினார்களா ? ஆட்சிக்கு வந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்களே செய்தார்களா ? திமுக ஆட்சி செய்த இந்த 3 ஆண்டுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலை வாசி உயர்ந்துள்ளது. மின் கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது. சொத்து வரியும், பத்திரப் பதிவு செலவும் உயர்ந்துவிட்டது. பால் விலை, பேருந்து கட்டணம் கூட உயர்ந்துவிட்டது.

இதையெல்லாம் கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. கையால் ஆகாத அரசாக திமுக மாறிவிட்டது. தமிழகத்தில் இளம் விதவைகள் உருவாக அதிமுக அரசே காரணம் என திமுக எம்பி கனிமொழி கூறினார். தற்போது கள்ளச்குறிச்சியில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அவர் என்ன பதில் சொல்லபோகிறார். திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி. போன்ற கட்சியினர் கூட கள்ளச்சாராய உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்வார் என பேசுகின்றனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கான பதில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தெரியவரும்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரினார். அப்போதே இது தொடர்பாக அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுத்திருந்தால் 58 பேர் உயிரிழந்திருப்பார்களா? அதிமுக ஆட்சியில் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் குவாட்டரின் விலை ரூ.60. இப்போது திமுக ஆட்சியில் குவாட்டரின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

அடித்தட்டு மக்கள், கூலி வேலை செய்வோர் இவ்வளவு பணம் கொடுத்து மதுவை வாங்க முடியாததால் விலை குறைவாக கிடைக்கும் கள்ளச் சாராயத்தை தேடி செல்கின்றனர். இதற்கு யார் காரணம் திமுக அரசு தான் காரணம். ஒரு குடும்பத்தின் வருமானத்துக்காக தமிழக மக்களை திமுக வஞ்சிக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியிலும் மற்றும் பல்வேறு இடங்களில் எங்கெல்லாம் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து அதிமுக ஏற்கனவே புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடியா திமுக அரசின் இன்றைய நிலை இப்படி தான் இருக்கிறது. ஆகவே, கள்ளச்குறிச்சி சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்’’.இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

x