‘அமித் ஷா இந்தி பற்றிப் பேசுவது அண்ணாமலை அரசியல் பேசுவதைப் போன்றது!’


நாமக்கல் குளக்கரைத் திடலில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசும் திருச்சி சிவா எம்.பி

இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில் நாமக்கல்லில் திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்கக்கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நிதிநிலை அறிக்கையைக் காட்டிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி என அமித் ஷா பேசியது தொடர்பாக பல்வேறு முன்னுதாரணங்களைக் கூறிப் பேசினார்.

கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, “நாட்டின் சரித்திரத்தை தலைகீழாக மாற்றிய இயக்கம் இன்றைக்கும் ஆளுகிறது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி வரவேண்டுமென உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இது அவரது ஆசை. அதைப் பற்றி நமக்கென்ன கவலை. இதுபற்றி என்னிடம் கேட்டபோது அண்ணாமலை அரசியல் பேசுவதற்கும், அமித் ஷா இந்தியைப் பற்றி பேசுவதற்கும் நான் கவலைப்படுவதில்லை என்றேன்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இங்கு மட்டும் உங்களால் கால் வைக்க முடியாது. நாடாளுமன்றத்திற்கு சென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது எனக்கு. வேண்டாமென்று தான் படிக்கவில்லை. பெரிய சிரமமில்லை. முனைப்பெடுத்தால் இரண்டு, மூன்று மாதங்களில் இந்தியில் கவிதைகூட என்னால் எழுத முடியும். படிக்கக் கூடாது என்றுதான் இருக்கிறோம். அண்ணாவிடம் ஓருவர் கேட்டார், ‘இந்தியை இப்படி கடுமையாக எதிர்க்கிறீர்கள். இரண்டு மாதத்தில் இந்தியை படித்து விடலாம்’ என்றார். அதற்கு அண்ணா, ‘ஆம், அதற்கு மேல் அதில் படிக்க என்ன இருக்கிறது?’ என்றார். இந்தியை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் என்றில்லை. இந்தியா என்பது பல மொழிகளை, பல பண்பாடுகளை, கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒரு துணைக் கண்டம். நாட்டிற்கும், துணைக் கண்டத்திற்கும் என்ன வேறுபாடு?” என்றார்.

மேலும், “நாடு என்றால் ஒரு நாடு, மொழி, ஒரு கலாச்சாரம். அதைக் கொண்டுவர பாஜக முயலாம். அது முடியாது. ஏன் தெரியுமா? இங்கிருந்து ஆந்திரா போனாலே உணவும் மாறும். உடையும் மாறும். மராட்டியம் போனால் பண்பாடு மாறும். பஞ்சாபுக்குப் போனால் கலாச்சாரம் மாறும். காஷ்மீருக்குப் போனால் எல்லாம் மாறும்.

ஆனால், நாம் அனைவரும் ஒன்றாக வாழ்கிறோம். பல இனங்கள், பல கலாச்சாரங்கள், பல பண்பாடுகள். ஆனால் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்கிறோம் அல்லவா... அதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம். இதை யாரும் சிதைக்க முடியாது. பல மொழிகள் இருக்கிற நாட்டில் இருக்கும் ஒரு மொழி இந்தி. அந்த இந்தியை எல்லாரும் படிக்க வேண்டுமென்பதற்கு என்ன அவசியம்” என்று திருச்சி சிவா கூறினார்.

x