“கள்ளக்குறிச்சியில் கோட்டை விட்டது ஏன்?” - முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி


கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விஷச் சாராய உயிர்பலிக்கு தார்மிகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும், இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி இன்று (ஜூன் 24) காலை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்சி.சம்பத் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கே பாண்டியன் எம் எல் ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம் எல் ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் எந்த அதிகார சக்தியும் காவல் துறை மீது பாய முடியாது. அவரின் பொறுப்பில் இருந்தது காவல் துறை என்றும் சிபிசிஐடி வசம் கள்ளக்குறிச்சி வழக்கு இருந்தால் மீண்டும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

பட்டியலின மக்கள் அதிக அளவில் உயிரிழந்தும் திருமாவளவன் வாய் திறக்கவில்லை. முத்தரசன், பாலகிருஷ்ணன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன் என எவரும் வாய் திறக்கவில்லை” என்றார். மேலும் “மரக்காணத்தில் விஷச் சாரய‌ உயிழப்பு ஏற்பட்டபோது இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதல்வர் மீண்டும் கள்ளக்குறிச்சியில் கோட்டை விட்டது ஏன்?” என்றார்.