எம்ஜிஆர் பெயரில் இன்னொரு புதுக்கட்சி?


அய்யாதுரை பாண்டியன்

தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர் அய்யாதுரை பாண்டியன். குஜராத் தொழிலதிபரான இவருக்கு தமிழகத்திலும் கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் உண்டு. அரசியல் ரீதியாக ஒரு காலத்தில் அதிமுகவில் அதிகாரம் செலுத்தியவர் இவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் அடையாளம் தெரியாமல் இருந்தார். அதனால் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரம்மாண்ட படை திரட்டி திமுகவில் ஐக்கியமானார்.

இவரது அருமை பெருமைகளைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “எனக்கு, தலைவர் கலைஞர் முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை தான்” என்று அந்த இணைப்பு விழாவில் பெருமிதம் கொண்டு பேசினார். பேசியதோடு நிற்காமல், அய்யாதுரைக்கு திமுக வர்த்தக அணியின் மாநில துணைத் தலைவர் பொறுப்பையும் வழங்கினார்.

கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தென்காசி மாவட்டத்தில் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அய்யாதுரை பாண்டியன். அதிலும் குறிப்பாக, கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியை மையம் கொண்டே இவரது நலத்திட்ட உதவி முகாம்கள் நகர்ந்தன. அதற்கு காரணம், கடையநல்லூர் தொகுதியில் இவர் திமுக வேட்பாளராக களமிறங்க நினைத்தது தான். அதற்கேற்ப, “கடையநல்லூர் உங்களுக்குத்தான்” என திமுக தரப்பில் இவருக்கு சிலர் உறுதிகொடுத்திருந்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது.

ஆனால், தென்காசி திமுகவுக்குள் இவரது வருகையையும் வளர்ச்சியையும் பிடிக்காத திமுக தலைகள் சிலர், தந்திரமாக காய் நகர்த்தி கடையநல்லூர் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கவைத்துவிட்டார்கள். இதனால் ஏமாற்றமடைந்த அய்யாதுரை பாண்டியன், தனக்கு திமுகவில் சீட் இல்லை என்றதுமே தினகரனை சந்தித்து அமமுகவில் ஐக்கியமானார். இவரை வாஞ்சையோடு அழைத்துக் கொண்ட தினகரன், இவரை கடையநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளராகவும் நிறுத்தினார். அத்துடன் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பதவியும் அய்யாதுரை பாண்டியனை தேடி வந்தது. பேரவைத் தேர்தலில் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் பெற்ற அய்யாதுரை பாண்டியன், திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் தோற்று அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியின் வெற்றிக்குக் காரணமானார்.

இந்த நிலையில், அமமுகவிலும் அய்யாதுரை பாண்டியனுக்கு அதிருப்தி தலைதூக்கியது. இங்கே அவருக்கு நெருக்கடி கொடுத்தவர் அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தனது மாவட்டத்தில் வெற்றிவாய்ப்புள்ள நபர்களை வேட்பாளராக நிறுத்த முயற்சித்திருக்கிறார் அய்யாதுரை பாண்டியன். ஆனால், அந்த லிஸ்ட்டில் இருந்த சிலரை நீக்கிவிட்டு தனக்கு வேண்டப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினாராம் மாணிக்கராஜா. இதையும் சகித்துக் கொண்டு, தன்னால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு முழுமையாக செலவு செய்து அவர்களில் சிலரை ஜெயிக்கவும் வைத்த அய்யாதுரை பாண்டியன், இரண்டு நபர்களை துணைத் தலைவர் பதவியிலும் அமர்த்தி தனது செல்வாக்கை நிலைநிறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், அமமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சங்கரன்கோவிலில் நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாணிக்கராஜாவுக்கும் அய்யாதுரைக்கும் இடையே கட்சி செயல்பாடுகள் தொடர்பாக வாக்குவாதம் முற்றியதாகச் சொல்கிறார்கள். இந்தச் சுவடு மறைவதற்குள்ளாகவே அய்யாதுரை பாண்டியன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தினசரிகளில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தனது அடுத்தகட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களிடம் பேசிவரும் அய்யாதுரை பாண்டியனை தங்கள் பக்கம் இழுக்க வேகமாக காய் நகர்த்துகிறது பாஜக. ஆனால் அவரோ, “இனி எந்தக் கட்சியிடமும் போய் கைகட்டி நிற்கும் எண்ணம் இல்லை. அதற்காக அரசியலைவிட்டும் ஓடிவிடமாட்டேன். எனது ஆதரவாளர்களைக் கலந்து பேசி கூடிய விரைவில் நானே ஒரு கட்சியை தொடங்குவேன். அது எம்ஜிஆர் புகழ்பாடும் கட்சியாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறாராம்.

தனது எதிர்கால அரசியல் பயணம் இப்படித்தான் இருக்கும் என முன்கூட்டியே யூகித்துவிட்ட அய்யாதுரை பாண்டியன், தனது கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே ரெடிசெய்துவைத்துவிட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

x