குப்பை வரி ரத்து அரசாணை வெளியிடாததால் மக்கள் பாதிப்பு: புதுச்சேரி அரசு மீது பாஜக குற்றச்சாட்டு  


புதுச்சேரி: குப்பை வரி கட்டினால்தான் வீட்டு வரி கட்டமுடியும் என்பதால் குப்பை வரி ரத்து அரசாணை வெளியிடாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக மாநிலத்தலைவராக அதிக ஆண்டுகள் இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு மாநிலங்களவை எம்.பி., செல்வகணபதி நியமிக்கப்பட்டார். அவரது செயல்பாட்டினால்தான் மக்களவைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததாக சாமிநாதன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றாததும், வரிகள் தொடர்பாக புதுவை மாநில முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று விடுத்துள்ள அறிக்கை: ''ஆட்சி பொறுப்பேற்ற முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் குப்பை வரி ரத்து என்ற அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். ஆனால் உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சி உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடம் குப்பை வரி கட்டினால் தான் வீட்டு வரி கட்ட முடியும் என்று அதிகாரிகள் ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.

குப்பை வரி ரத்து என்றால் இதுவரை அரசாணை வெளியிடவில்லை. பட்ஜெட்டுக்கு முன்பு அரசாணை வெளியிட வேண்டும். சாதாரண மக்கள் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் அனைவரையுமே குப்பை வரி பாதிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் குப்பை வரி, வீட்டு வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சொத்து வரி என்று பல வரிகள் கட்டினாலும், சப் டைட்டிலில் பல கூடுதல் வரிகள் வ மக்களை பயமுறுத்தி வருகிறது.

இதன் வெளிப்பாடு மக்களின் கோபம் செயலிழந்த காங்கிரசை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளது. இதனால், அரசு சரியான நடவடிக்கை எடுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.வருங்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அரசு மீண்டும் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.