இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது


ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளில் சென்ற 22 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் படகுகளைசுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், காளீஸ்வரன், முருகானந்தம், முத்துக்குமார், சீமான்,ராஜ், சந்தியா ப்ருக்லின், சர்ப்ரசாதம், கருப்பையா உள்ளிட்ட 22 மீனவர்களைக் கைது செய்தனர். மேலும், படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைதான 22 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 5-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதிநளினி சுபாஷ்கரன் உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடித் தடைக்காலம் காரணமாக கடந்த 2 மாதங்களாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள், தடைக்காலம் முடிந்த மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்: இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவர்சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ஜி.கே.வாசன் கண்டனம்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்ட கண்டண அறிக்கையில், ‘‘ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது அத்துமீறிய செயலாகும். அவர்களை விடுவிக்கவும், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.