தென்னயில் கள் இறக்கும் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு  


நாமக்கல்: கள்ளுக் கடைகளைத் திறக்க வலியுறுத்தி ஆக.1-ம் தேதி தென்னை மரத்தில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 'தமிழகத்தில் தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயின் விலையில் அவ்வப்போது வீழ்ச்சி ஏற்படுகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுபடுத்த கள்ளுக் கடைகளைத் திறக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்‌‌ சார்பில் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தோம்.

எனினும், எந்த விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுவிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கலப்படம் இல்லாத நிலையில், உடலுக்கு எவ்வித தீங்கும் செய்யாத, தென்னையில் இருந்து இறக்கும் கள்ளுக்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி உடனடியாக கள்ளுக் கடையை திறக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக கள்ளுக் கடையை திறக்க அனுமதிக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் ஒன்றினைந்து அவரவர் நிலத்தில் வரும் ஆக.1-ம் தேதி தென்னை மரத்தில் கள்ளு கட்டி இறக்குவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.