கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 514 பேர் மீது வழக்கு


கோவை: கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 514 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயத்தை குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு எற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் காட்டூர் போலீஸார் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் 106 பெண்கள் உள்பட 496 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஏ.டி.ராஜன், சோமசுந்தரம் உள்பட 18 பேர் மீது இடையூறு செய்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக, மொத்தம் 514 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

x