சென்னை: கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நிதி உதவி செய்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது 50-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். கட்சி தலைவராக நடிகர் விஜய் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால், தமிழகம் முழுவதும் விஜய்யின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் செய்து பெரிய அளவில் கொண்டாட தவெக நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், கள்ளக்குறிச்சி ஏற்பட்ட உயிரிழப்புகளால், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் எனவும் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். முன்னதாக, நடிகர் விஜய்யும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்தனர். தென் சென்னை மாவட்ட தலைவர் க.அப்புனு தலைமையில் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை, அரசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.