நெல்லையில் மாடு முட்டி பேருந்தில் விழுந்து ஒருவர் பலி: சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவு


திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டையில் மாடு முட்டித் தள்ளியதால் நடந்த சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இருசக்கர வாகனத்தில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அங்கு நான்குவழிச் சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டும் திருப்பி விடப்பட்டிருந்தது.

அப்போது பகுதியில் 2 மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அதில் ஒரு மாடு இருசக்கர வாகனத்தில் சென்ற வேலாயுதராஜை முட்டித் தள்ளியது. இதில் நிலைகுலைந்த அவர், குமுளி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது விழுந்தார். பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வேலாயுதராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடுகளை பிடிக்க உத்தரவு: இதனிடையே, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டன. மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கும்போதும், ஏதாவது அசம்பாவித சம்பவம் நடக்கும்போதும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது பிடித்தும், பின்னர் மீண்டும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதும் தொடர்ந்து நடக்கிறது. சாலைகளில் மாடுகள் திரிவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

x