பழைய வாகனங்களுக்கான எப்சி கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு


‘நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழமையான மோட்டார் வாகனங்கள் தகுதிச்சான்று (எப்சி) பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு திடீரென ரூ.13 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய லாரிகள் வாங்கும்போது 7 ஆண்டுகள் வரை 2 ஆண்டுக்கு ஒரு முறையும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை காண்பித்து தகுதிச் சான்று (எப்சி) பெற வேண்டும். இதுவரை எப்சிக்கான கட்டணம் லாரிகளுக்கு ரூ.800 என இருந்தது. இந்நிலையில் இன்று முதல் லாரிகளுக்கான எப்சி கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை வரி ரூ.200 சேர்த்து ரூ.13,700 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு இதுவரை எப்சி கட்டணம் ரூ.600 ஆக இருந்தது. தற்போது இது ரூ.5,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் எப்சி சான்றிதழ் பெறாத வாகனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய சரக்கு வாகனங்களையும், 20 ஆண்டுகளுக்கு மேல் வயதான பயணிகள் வாகனங்களையும் அழித்துவிட்டு, அதன் உரிமையாளர்கள் புதிய வாகனங்களை வாங்கும்போது சலுகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு கொள்கை (ஸ்கிராப்பிங் பாலிசி) முடிவை அறிவித்தது.

தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி

இதை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில் பழைய லாரிகள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான எப்சி கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பழைய வாகன, லாரி உரிமையாளர்களை பாதிப்படையச் செய்வதுடன் தாங்களாகவே 15 ஆண்டுகள் பழமையான லாரிகளை விற்பனை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கினறனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி கூறுகையில், "தகுதிச்சான்றுக்கான கட்டண உயர்வே லாரி உரிமையாளருக்கு பாதிப்பு தான். ஸ்கிராப்பிங் பாலிசியை எடுத்துக் கொண்டால், வங்கி வாகனக் கடன் மூலம் லாரிகளை அதன் உரிமையாளர்கள் வாங்குவர். அதை திருப்பிச் செலுத்த 15 ஆண்டுகளாகும். இச்சூழலில் 15 ஆண்டான வாகனங்களை அழித்தால் லாரி உரிமையாளர்கள் எப்படி தொழில் நடத்த முடியும்.

வாகனங்கள் சாலையில் ஓடத் தகுதி எனக் கொடுப்பதுதான் தகுதிச்சான்று. இயக்க தகுதியில்லாத வாகனம் என்றால் சான்று கொடுக்கமாட்டாரகள். தகுதியுடைய வாகனம் என சான்று வழங்குவற்கு ஏன் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஸ்கிராப்பிங் பாலிசியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு எனக் கருதினால் 15 ஆண்டாகிய வாகனங்களை அன்றைய தேதியில் அந்த வாகனம் மார்க்கெட்டில் விற்பனையாகும் கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். மேலும், புதிய வாகனம் வாங்க வங்கியில் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

x