தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.70-க்கு விற்பனை


சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.

சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பெரம்பூர், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் முதல் தர தக்காளி ரூ.100 ஆகவும், சிறிய ரக தக்காளி கிலோ ரூ.70-க்கும் விற்கப்பட்டு வருகிறது. மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.60, நூக்கல் ரூ.50, கேரட் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.35, முள்ளங்கி, முருங்கைக்காய், பீட்ரூட், பச்சை மிளகாய், வெண்டைக்காய் தலா ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.28, பாகற்காய் ரூ.25, உருளைக் கிழங்கு ரூ.23, கத்தரிக்காய் ரூ.20, முட்டைக் கோஸ் ரூ.14,புடலங்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 3 வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் பருவமழை குறிப்பிடும்படி பெய்யாமல், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்’’ என்றனர்.