சென்னை மக்களுக்காக பொழுதுபோக்கு நகரம்: பூந்தமல்லி எம்எல்ஏ வலியுறுத்தல்


பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி

சென்னை: சென்னை மக்களுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட பொழுதுபோக்கு நகரத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

இது குறித்து, சட்டப்பேரவையில், ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி பேசியதாவது: கழிவுநீரை சுத்திகரித்து ஆறுகளில் விட்டால் ஆறுகள் மாசடையாது. ஆனால், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் எடுக்கப்படும் தண்ணீர் அப்படியே மழைநீர் வடிகால்களில் விடப்படுகிறது. அவற்றை சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று சுத்திகரித்து அதன்பின் ஆற்றில் விட்டால், ஆறுகளில் நாற்றம் இருக்காது.

கூவம் ஆறு இது போன்று மாறியதற்கு சுத்திகரிக்கப்படாதது தான் காரணம். எனவே, முக்கியமான பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல், சென்னையில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். சென்னையின் குடிநீருக்காக செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீரை செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்த முடிவதில்லை.

அங்கு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் உப்பாக வருகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் குழாயில் ஓர் இணைப்பு கொடுத்து செம்பரம்பாக்கம் பகுதி மக்கள் பயன்படுத்த வசதி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் சென்னையில் மக்கள் பொழுதுபோக்குவதற்கு இடம் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்களில் அதிக அளவில் குவிகின்றனர்.

தீவுத் திடலில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுபோதாது. வெளிநாடுகளில் உள்ளது போல் மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சென்னைக்கென தனியாக பொழுதுபோக்கு நகரம் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.