ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஜூலை 1 முதல் 31 வரை நடைபெறுகிறது


சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 13-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 82,477 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் கலந்தாய்வும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் பள்ளிகள் திறப்பு உட்பட நிர்வாகப் பணிகளால் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியாவதில் தாமதம் நிலவி வந்தது. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டது.

அதன்விவரம் வருமாறு: மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூலை 4, 5-ம் தேதிகளில் முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 6-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என பல்வேறு சுற்றுகளாக ஜூலை 8 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 25-ம் தேதி வெளியிடப்படும். அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை முறையிடலாம்.

அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என பல்வேறு சுற்றுகளாக ஜூலை1 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

x