அதிருப்தி இருந்தாலும் பாஜக மீண்டும் மீண்டும் வெற்றிபெறுவது ஏன்?


மாநாட்டில் உரையாற்றும் சீதாராம் யெச்சூரி...

"மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இருந்தாலும் பாஜக மீண்டும் மீண்டும் வெற்றிபெறுகிறது. ஏன் வெற்றிபெறுகிறது என ஆராய வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 23-வது மாநில மாநாடு மதுரையில் இன்று தொடங்கியது. மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:-

“இன்றைக்கு நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ் கொள்கையான இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு நவீன தாராளமயமாக்கலையும் அமல்படுத்தி வருகிறார்கள். நாட்டின் வளங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள், குடியுரிமையும் பறிக்கப்படுகின்றன. தற்போதைய ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகளிடமிருந்து, பாரம்பரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமாகத்தான் இன்றைய அரசியல் களம் அமைந்திருக்கிறது.

பல மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை கொண்ட ஒன்றியம்தான் இந்தியா. அந்தப் பன்முக கலாச்சாரத்திற்கு பாஜகவால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்களின் கலாச்சாரம், மாநில மக்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க நாம் ஓரணியில் திரள வேண்டும்.

மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இருந்தாலும் பாஜக மீண்டும் மீண்டும் வெற்றிபெறுகிறது. ஏன் வெற்றிபெறுகிறது என்று ஆராய வேண்டும். பாஜக அரசு நாட்டு மக்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி சாதாரண மக்களிடமிருந்து பல லட்சம் கோடியை கொள்ளையடித்து தனியார் நிறுவனங்களின் கையில் கொடுக்கின்றனர். நாட்டின் பிரதமரோ, அமைச்சர்களோ நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி வாய்திறந்து பேசுவதில்லை. மாறாக, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையைச் செய்து தேர்தலில் வெற்றிபெறுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்களை ஒன்றுதிரட்டும் வேலையை மட்டுமே செய்கின்றனர். இந்து முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். வன்முறையை கட்டவிழ்த்துவிடுகின்றனர். மக்களைப் பிளவுபடுத்தி மக்கள் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.

எனவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதற்கு நமது கட்சி முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது. நாட்டில் சில சவால்களை சந்திக்கவும், எதிர்கொள்ளவும் நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும். முக்கியமாக, இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே கிளர்ச்சிகளை உருவாக்க வேண்டும். வகுப்புவாத, எதேச்சதிகாரத்திற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து வகுப்புவாத, பாசிச இந்துத்துவா சக்திகளை முறியடிக்க வேண்டும். நம் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். தமிழகத்தில் வகுப்புவாத சக்திகளான பாஜக, அதிமுகவுக்கு மிகப்பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது இந்தியா முழுமைக்குமான முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

x